(Translated by https://www.hiragana.jp/)
பன்சன் சுடரடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா

பன்சன் சுடரடுப்பு (Bunsen burner) என்பது எல்லாச் சோதனைச்சாலைகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும். இது சூடாக்குதல், எரித்தல், தொற்று நீக்குதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

படிமம்:Bunsen burner.jpg
ஊசி வால்வுடன் கூடிய பன்சன் சுடரடுப்பு.

ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன் (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது மைக்கேல் பரடேயின் முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.

இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக மீதேன் (methane) எனும் வாயுவைக் கொண்டிருக்கும், இயற்கைவாயு (natural gas), புரொப்பேன் (propane), பியூட்டேன் (butane) என்பன அடங்கிய [திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு]] (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நிலக்கரி வாயுவையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

படிமம்:Bunsen burner flame types .jpg
பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை

பன்சன் சுடரடுப்பு, ஒரு பாரமான அடியையும், அதிலிருந்து மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயையும் கொண்டது. இக் குழாயின் அடிப்பகுதியில், அடிக்குச் சற்று மேலாக வாயு வழங்கும் குழாயைப் பொருத்துவதற்கான இணைப்புகள் உள்ளன. சோதனைச்சாலை மேசைகளில் பல முனைகளைக் கொண்ட வாயு வழங்கும் இணைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இம்முனைகளில் இருந்து ரப்பர் குழாய்கள் மூலம் பன்சன் சுடரடுப்புக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பன்சன் சுடரடுப்பின் நிலைக்குத்துக் குழாயின் அடிப்பகுதியில் நுண்ணிய துளை மூலம் செலுத்தப்படும்வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளூடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக வெளிவரும் இக்கலவை எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சன்_சுடரடுப்பு&oldid=883241" இலிருந்து மீள்விக்கப்பட்டது