(Translated by https://www.hiragana.jp/)
இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் எலிசபெத்
இங்கிலாந்தினதும், அயர்லாந்தினதும் அரசி (more...)
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
ஆட்சி 17 நவம்பர் 1558 – 24 மார்ச் 1603
முடிசூடல் 15 ஜனவரி 1559
முன்னிருந்தவர் முதலாம் மேரி
பின்வந்தவர் முதலாம் ஜேம்ஸ்
வேந்திய மரபு டியூடர் இல்லம்
தந்தை எட்டாம் ஹென்றி
தாய் ஆன் போலீன்
பிறப்பு 7 செப்டெம்பர் 1533
கிரீனிச், இங்கிலாந்து
இறப்பு 24 மார்ச்சு 1603(1603-03-24) (அகவை 69)
ரிச்மண்ட், இங்கிலாந்து
அடக்கம் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடம்


முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603)[1] இங்கிலாந்தின் அரசியாகவும், 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசி, குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும், கடைசியுமான ஆட்சியாளர் ஆவார். இங்கிலாந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். அவருடைய 45 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரச் செழிப்பும், இலக்கிய மலர்ச்சியும் ஏற்பட்டன. இங்கிலாந்து உலகக் கடலாதிக்க நாடுகளுள் தலையாய இடத்தைப் பெற்றது.[2]


பிறப்பும் மரபு உரிமையும்

1533 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விட்சில் பிறந்தார். எட்டாம் ஹென்றியின் மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். ஆனால் இவரது தாய் ஆன் போலீன், எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே மரண தண்டனை விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிைவத்த போதும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்றார். இவரது சகோதரர் ஆறாம் எட்வர்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவருடைய விருப்பம் புறந்தள்ளப்பட்டதுடன், 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது ஒன்று விட்ட உடன்பிறந்த சகோதரியான கத்தோலிக்க மேரியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்.[3] மேரியின் ஆட்சிக் காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் கலகக்காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.

அரசியல், இராஜதந்திரம் மற்றும் குணநலன்கள்

முதலாம் எலிசபெத் நல்ல ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தியதுடன், பேர்க்லேயின் பாரனான வில்லியம் சிசில் என்பவரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் படி ஆலோசித்தே முடிவு செய்தார். அரசியானதும் அவர் செய்த முதல் வேலை, ஆங்கிலேயப் புரோட்டஸ்டண்ட் திருச்சபையை நிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார். ட்ரேக், வால்டர், ராலி, ஹாக்கின்ஸ் போன்றவர்களை உற்சாகப்படுத்தி கடல் ஆதிக்கத்தில் சிறந்து விளங்க செய்தார். பின்னர் எட்மண்டு ஸ்பென்சர், கிறிஸ்டோபர் மர்லோ, ஷேக்ஸ்பியர் போன்ற கவிதை, கதா சிரியர்களை ஊக்கப்படுத்தி இலக்கியம் வளரச் செய்தார் .தன் தந்தை எட்டாம் ஹென்றியின் கொடிய உள்ளத்தையும், தாய் ஆன் போலினின் சாகசப்பண்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தார்.[4] ஆசுதிரியாவின் சார்லசு, சுவீடன் மன்னர், இசுபெயின் நாட்டு இரண்டாம் பிலிப் இவர்கள் அரசியை மணக்க போட்டியிட்ட முக்கியமானவர்கள். எலிசபெத் இவர்கள் அனைவரையும் நம்பிக்கையோடு சில வருடங்கள் காத்திருக்க வைத்து வெற்றி கண்டார். இறுதியில் தான் எவரையும் மணந்து கொள்ளப் போவதில்லை என்றும் ,கன்னியாகவே காலம் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்து தன் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நாடாளுமன்றம் பல வேண்டுகோள்களை விடுத்தும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

பாராளுமன்றத்தின் நிலை

ஸ்டூவர்ட் அரசர்கள் காலத்தில் உரிமைக்காக போராடிய பாராளுமன்றம், எலிசபெத் காலத்தில் கை தூக்கும் மன்றமாகவே இருந்து வந்தது. பாராளுமன்றமானது முதலாம் எலிசபெத்தின் 45 வருட ஆட்சியில் வெறும் 13 தடவையே கூடியது. மேலும், எலிசெபத்த தமது விருப்பப்படியே அரசாண்டார். பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 91 மசோதாக்களில் 48 ஐ தனது மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்தார். பேச்சு உரிமை கோரிய பீட்டர் வென்ட் ஒர்த் என்ற அங்கத்தினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. Dates in this article before 14 September 1752 are in the Julian calendar and January 1 is treated as the beginning of the year, even though March 25 was treated as the beginning of the year in England during Elizabeth's life.
  2. Michael H. Hart (1992). The 100. New York: Kensington Publishing Corporation. p. 595. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8065-1350-0.
  3. "I mean to direct all my actions by good advice and counsel." Elizabeth's first speech as queen, Hatfield House, 20 November 1558. Loades, 35.
  4. Starkey Elizabeth: Woman, 5.