அபிநயம்
அபிநயம் (ⓘ) என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து, இடை, வயிறு முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன. மேலும் அபிநயம் என்ற கலைக்கு அதிபதியான சரஸ்வதி தேவியே விளங்குவதால். அவளே அபிநய சரஸ்வதி, அபிநய தேவி, அபிராமி தேவி என்று அழைக்கப்படுகிறாள்.
வகைகள்
[தொகு]பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:
- ஆகார்ய அபிநயம்
- வாசிக அபிநயம்
- ஆங்கிக அபிநயம்
- சாத்விக அபிநயம்
ஆகார்ய அபிநயம்
[தொகு]அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.
ஆகார்ய அபிநயம் 3 வகைப்படும்.
1) நிஜகார்ய அபிநயம்.
2) அபிசாரி அபிநயம்.
3) விபசாரி அபிநயம்.
வாச்சிகா அபிநயம்
[தொகு]பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாச்சிகா அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.
வாச்சிகம் 4 வகைப்படும்
1) சுகீத வாச்சிகம்.
2) உபகீத வாச்சிகம்.
3) சுசப்த வாச்சிகம்.
4) உபசப்த வாச்சிகம்.
ஆங்கிக அபிநயம்
[தொகு]உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.
அபிநயதர்ப்பணம் என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
'யதோ ஹஸ்தஸ், ததோத்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ், ததோ மன
யதோ மனஸ், ததோ பாவோ
யதோ பாவ ஸ்ததோ ரஸ
(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார்.
கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர
[1]
பிரிவுகள்
[தொகு]ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.
அங்கம்
[தொகு]தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.
பிரத்தியாங்கம்
[தொகு]புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.
உபாங்கம்
[தொகு]உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,உதடு,முகவாய் ஆகியனவாகும்.
சாத்விக அபிநயம்
[தொகு]நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும். கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.
நவரசங்கள்
[தொகு]அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:
- ஸ்ருங்காரம் (வெட்கம்)
- வீரம்
- கருணை
- அற்புதம்
- ஹாஸ்யம்(சிரிப்பு)
- பயானகம் (பயம்)
- பீபல்சம் (அருவருப்பு)
- ரெளத்ரம் (கோபம்)
- சாந்தம் (அமைதி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாடல் எண் : 572