(Translated by https://www.hiragana.jp/)
நீராவிய மறுவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நீராவிய மறுவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீராவிய மறுவாக்கம் (Steam reforming) என்பது இயற்கை எரிவளி போன்ற ஐதரோகார்பன் எரிபொருள்களில் இருந்து ஐதரசன் போன்ற பயனுள்ள பொருள்களை உருவாக்கும் ஒரு முறையாகும். மறுவாக்கி என்னும் ஒரு கலனில் உயர் வெப்பநிலையில் நீராவியையும் எரிபொருளையும் சேர்த்து வினை நிகழ்த்துவதன் மூலம் இதனைச் செயல்படுத்தலாம். நீராவி-மெத்தேன் மறுவாக்கி என்பது ஐதரசன் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. எரி கலன்களில் பயன்படுத்தத் தேவையான ஐதரசனை உற்பத்தி செய்யவும் அதே நுட்ப அடிப்படையில் சிறு மறுவாக்கி அலகுகளை உருவாக்குவதிலும் தற்போது அதிக ஆர்வம் காணப்படுகிறது.[1] எரிகலன் பயன்பாட்டிற்கு மறுவாக்கி கொண்டு ஐதரசன் தயாரிப்பது பெரும்பாலும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றது. பொதுவாக மெத்தனால், இயற்கை எரிவளி[2] ஆகியவற்றைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்றாலும், புரொப்பேன், பெட்ரோல், டீசல், எத்தனால் போன்ற பிறவற்றையும் பயன்படுத்தும் முயற்சிகளும் தென்படுகின்றன .[3]

மெத்தேன் மறுவாக்கி[தொகு]

ஆலைப் பயன்பாட்டிற்குத் தேவையான ஐதரசன் வளியைப் பெருமளவில் தயாரிப்பதற்கு நீராவி மறுவாக்கச் செயல்முறையே பயன்படுத்தப் படுகிறது. இதற்கு ஆரம்பப் பொருள்களாக இயற்கை எரிவளி அல்லது செயற்கை எரிவளி பயன்படுத்தப் படுகிறது. இது சில சமயம் நீராவி-மெத்தேன் மறுவாக்கி என்றும் அழைக்கப்படும். இது செலவு குறைந்த ஒரு வழிமுறையுமாகும்.[4] உயர் வெப்ப நிலையிலும் (700 – 1100 °C), ஒரு மாழைய வினையூக்கியின் (நிக்கல்) முன்னிலையிலும், நீராவியானது மெத்தேனோடு வினை புரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரசன் ஆகியவற்றை உருவாக்கும். இயல்பில் இது ஒரு மீளுரு வினையாகும்.

CH4 + H2OCO + 3 H2

உற்பத்தி செய்த கார்பன் மோனாக்சைடு உடன் சற்றே குறைந்த வெப்ப நிலையில் நீராவி கொண்டு வினை நிகழ்த்திக் கூடுதல் ஐதரசனைப் பெறலாம்.

மேற்படி வினையைக் கீழ்க்கண்ட வகையில் குறிக்கலாம்.

CO + H2OCO2 + H2

இதில், முதல் வினையானது வெப்பம் கவர் வினை ஆகும். இரண்டாவது வினை மிதமான வெப்பம் விடு வினை ஆகும்.

அமெரிக்க நாட்டில், இயற்கை எரிவளியை நீராவி மறுவாக்கம் செய்வதன் மூலம், ஓராண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் ஐதரசன் உற்பத்தி ஆகிறது. நீராவி மறுவாக்கம் என்பது நெய்தையைத் திருத்தும் வினையூக்கி மறுவாக்கம் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இச்செயல்முறையின் செய்திறன் 65% to 75% ஆகும்.[5]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிய_மறுவாக்கம்&oldid=2746086" இலிருந்து மீள்விக்கப்பட்டது