(Translated by https://www.hiragana.jp/)
நுவரெலியா - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நுவரெலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுவரெலியா
நுவரெலியாவின் ஒரு தோற்றம்.
நுவரெலியாவின் ஒரு தோற்றம்.
நுவரெலியா நகரைச் சூழ்ந்துள்ள தேயிலைத் தோட்டங்கள்

நுவரெலியா
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°57′58″N 80°45′58″E / 6.966°N 80.766°E / 6.966; 80.766
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1990 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இந்நகரம் நுவரெலியா மாவட்டத்தின் தலை நகரமுமாகும். இது மத்திய மாகாணத்தின் தலை நகரமான கண்டிக்குத் தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

பெயரின் தோற்றம்[தொகு]

சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.

சுற்றுலாத்துறை[தொகு]

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் குடியேற்றவாதக் கட்டிடக்கலைப் பாணியிலமைந்த கட்டிடங்கள் மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கவனமீர்க்கும் சில இடங்கள்[தொகு]

இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு கதையொன்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அணுக்கம் இல்லை.

இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா அண்மையில் உள்ள ஓர் அனுமன் கோவில்

இந்து தொன்மவியலின் வரலாற்றின்படி இங்குள்ள சீதாகோவில் (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் இராமாயணக் காவியத்தின் நாயகி சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் சீதா எலியா என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து பதுளை செல்லும் வழியில் ஹக்கலா தாவரப் பூங்காவை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, இராமாயண வழித்தடம் என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[1] சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் திவுரும்போலா இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.[1] இந்தத் திட்டங்களை இலங்கையின் அரச ஆசியர்ச் சமூகம் எதிர்த்துள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 A. Srivathsan. "sita temple construction to begin in Sri Lanka". மார்ச்சு 16, 2013. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 16, 2013.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nuwara Eliya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவரெலியா&oldid=3851884" இலிருந்து மீள்விக்கப்பட்டது