பெடோசியா
பெடோசியா (உருசியம்: Феодосия, Feodosiya; உக்ரைனியன்: Феодо́сія, Feodosiia;[1] (கிரேக்க மொழி: Θεοδοσία-இல் இருந்து) என்பது ஒரு துறைமுகம் மற்றும் உல்லாசப்போக்கிடம் ஆகும். இது தியோடோசியா என்றும் அழைக்கப்படுகிறது. கருங்கடலின் கடற்கரையில் அமைந்திருக்கும் இது கிரிமியா பகுதியின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பட்டணம் ஆகும். பெடோசியா நகராட்சியின் நிர்வாக மையமாக பெடோசியா செயல்படுகிறது. பெடோசியா நகராட்சி என்பது கிரிமியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இந்த நகரம் அதன் வரலாறு முழுவதுமே கபா என்று அழைக்கப்பட்டது. கடைசியாக எடுக்கப்பட்ட 2014ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரின் மக்கள் தொகை 69,145 .
வரலாறு
[தொகு]தியோடோசியா
[தொகு]இந்த நகரமானது கி. மு. ஆறாம் நூற்றாண்டில் மிலேடோசு நகரத்தில் இருந்து வந்திருந்த கிரேக்க காலனித்துவவாதிகளால் தியோடோசியா என்ற பெயருடன் நிறுவப்பட்டது. இந்த நகரம் அதன் வளமான விவசாய நிலங்களுக்காக அறியப்படுகிறது. விவசாய நிலங்களை நம்பியே இந்த நகரத்தின் வணிகமானது நடைபெற்றது. கி. பி. நான்காம் நூற்றாண்டில் இந்த நகரமானது ஹூணர்களால் அழிக்கப்பட்டது.
அடுத்த 900 வருடங்களுக்கு இந்த நகரம் ஒரு சிறிய கிராமமாக தொடர்ந்தது. சில நேரங்களில் கசர்கள் மற்றும் பைசாந்தியப் பேரரசு ஆகியோர் செல்வாக்குச் செலுத்திய பகுதிகளில் ஒன்றாக இது இருந்தது. அகழ்வாராய்ச்சிகளின் படி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து தேதியிடப்பட்ட கசர் கலைப்பொருட்கள் இந்த இடத்தில் கிடைக்கின்றன.
கிரிமியாவின் மற்ற பகுதிகள் போலவே இந்த இடம் (கிராமம்) கிப்சாக்குகளின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1230களில் மங்கோலியர்கள் இதனை கைப்பற்றினர்.