வே. தில்லைநாயகம்
வே.தில்லைநாயகம் (வேதி) | |
---|---|
நூலகவித்தகர் | |
பிறப்பு | சின்னமனூர், தமிழ்நாடு, இந்தியா | சூன் 10, 1925
இறப்பு | மார்ச்சு 11, 2013 கம்பம் | (அகவை 87)
புனைபெயர் | வேதி, அமுதப்பையா, உலகப்பன் |
தொழில் | தமிழ்நாடு பொது நூலக முதல் தொழில்புரி இயக்குநர் - ஓய்வு எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | MA,MLS,BT |
கருப்பொருள் | நூலகவியல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இந்திய நூலக இயக்கம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சீ.இரா.அரங்கநாதன் - கெளலா நூலகவியல் விருது |
துணைவர் | கோமதி |
பிள்ளைகள் | மகள்: அன்பரசி மகன்: மருத்துவர் அருள்வேலன் |
குடும்பத்தினர் | தம்பி: வித்துவான் வே. கனகசபாபதி தங்கை: இராமுத்தாய் |
வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார்.[2] சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார்.[1] தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 - 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார்.[1]
நூலகத் துறையில் ஈடுபாடு
[தொகு]மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர்..[2] 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் (1949 சூலை 18 - 1962 திசம்பர் 12 பிற்பகல்) ஆனார். 1962 திசம்பர் 12 பிற்பகலில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 சூலை 31ஆம் நாள் பிற்பகலில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆகத்து 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.[3] விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார்.[4] தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.
நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர்.
ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாகத் தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும்.
இந்திய நூலக இயக்கம் என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது.
பரிசு பெற்ற நூல்கள்
[தொகு]வேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரவுகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை."இந்திய நூலக இயக்கம்" நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. "இந்திய அரசமைப்பு" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது.
இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும்.
இவர் எழுதிய நூல்கள்
[தொகு]முதியோர் கல்வி மடல்:
- பொங்கல் (1958)
நூலகவியல்:
- நூலகப்பணி (1960)
- நூலக உணர்வு (1971 / 76 / 80)
- இந்திய நூலக இயக்கம் (1978 / 81)
- நூலக முன்னோடிகள் (1980)
- நூலகக் கதை (1981)
- நூலகப் பாடல்கள் (2002)
- நூலாக்க நெறிமுறைகள் (கையெழுத்துப்படி)
இந்தியத் தொகை வரிசை:
- 1 இந்திய வளம் (கையெழுத்துப்படி)
- 2 இந்திய வேளாண்மை (மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்; 2.10.1988; பக்.756)
- 3 இந்தியத் தொழில் (கையெழுத்துப்படி)
- 4 இந்தியப் பொருளாதாரம் (கையெழுத்துப்படி)
- 5 இந்தியச் சமூகம் (கையெழுத்துப்படி)
- 6 இந்திய மாநிலங்கள் (கையெழுத்துப்படி)
- 7 இந்திய அரசமைப்பு (மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்; 2.10.1989; பக்.360)
- 8 இந்திய வரலாறு (கையெழுத்துப்படி)
- 9 இந்திய உலகத் தொடர்பு (கையெழுத்துப்படி)
அரங்கநாதன் வரிசை:
- நாமறிந்த அரங்கநாதன் வாழ்மை (1994)
வாழ்க்கை வரலாறு:
- அரசரும் புலவரும் (1960)
- புதியன கண்டவர் (1976/ 80)
- வள்ளல்கள் வரலாறு (1975 / 79)
- நூலகவித்தகர் எழுபது (1995)
- நெஞ்சில் நின்றவர்கள் (1998)
அறிவியல்:
- அறிவியல் என்றால் என்ன? (1981)
நிலவரைவியல்:
- சின்னமனூர் (1957)
தமிழியல்:
- தமிழ் எழுத்துச் சீர்மை (1.2.1979)
ஆண்டு நூல் (Year Book)
- குறிப்பேடு (1961 / 1962 / 1963)
நூற்பட்டியல்கள்
ஆங்கில நூல்கள்
[தொகு]- The Library Science: The Tradition of Tamils (1972)
- Ranganathan – Kaula Awardee VETHI (1995)
- New Dimensions o Library Scenario in India (1997)
- S.R. Ranganathan and Madras Public Library Act (1997)
- Golden Jubilee of Madras Public Library Act 1948-2001 (2001)
- VETHIANA - 2005 (2005)
இவர் பதிப்பித்த நூல்கள்
[தொகு]- இந்திய நூலக வரலாறு (1981)
- 1980இல் தமிழ் நூல்கள் ஒரு மதிப்பீடு (1981)
- தமிழ்நாட்டில் நூலகப்பணி வளர்ச்சி (1981)
மறைவு
[தொகு]வே. தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தேனி மாவட்டம் கம்பம் நகரில் மரணமடைந்தார்.
பிற
[தொகு]வே. தில்லைநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை "வேதி: வாழ்வும் சிந்தனையும்" என்னும் தலைப்பில் கனக அரிஅரவேலன், நிரஞ்சனா அருள்வேலன் ஆகியோர் நூலக எழுதி 2017 ஆகத்து 6ஆம் நாள் சின்னமனூரில் வெளியிட்டனர்.[5]
தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறையின் சின்னமனூர் கிளையில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வே. தில்லைநாயகத்தின் படத்தை விருபா.காம் நிறுவுநர் து. குமரேசன் திறந்து வைத்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 VETHIANA (Ed.) Arulvelan and Anbarasi, Gomathi Pathipagam, Cumbum, 2005
- ↑ 2.0 2.1 நூலக வித்தகர் எழுபது, (பதி) கனக அரிகரவேலனும் பிறரும், 1995
- ↑ வேதி:வாழ்வும் சிந்தனையும், கனக அரிஅரவேலனும் நிரஞ்சனா அருள்வேலனும், சபாபதி பதிப்பகம், சின்னமனூர், 2017
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/thillai-nayagam-dead/article4499297.ece
- ↑ தி இந்து, 08-08-2017 தேனி பக்.3
- ↑ தினமலர், 07-08-2017 தேனி பக்.2
வெளி இணைப்புக்கள்
[தொகு]- வே. தில்லைநாயகம் நூல்களின் எண்மப்படிகள்
- வே.தில்லைநாயகம் அவர்களின் நூல்கள்
- வே. தில்லைநாயகம் எழுதிய இந்திய நூலக இயக்கம் என்னும் நூலைப் பற்றி முனைவர் ச.வே.சுப்பிரமணியன் எழுதிய திறனாய்வு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- வே. தில்லைநாயகம் எழுதிய Public Library Service : Tradition of Tamil Nadu என்னும் ஆங்கிலக் கட்டுரை பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்