(Translated by https://www.hiragana.jp/)
சபை உரையாளர் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

சபை உரையாளர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கையில் வெறுப்புற்றவர்போல் அமர்ந்திருக்கும் சபை உரையாளர். விவிலியப் பதிப்போவியம். கலைஞர்: குஸ்தாவ் டோரே. ஆண்டு: சுமார் 1866

சபை உரையாளர் (Ecclesiastes) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இது பரிசுத்த வேதாகம பதிப்பில் பிரசங்கி என்று வழங்கப்படுகிறது.[1][2][3]

சபை உரையாளர் நூல் பெயர்

[தொகு]

சபை உரையாளர் என்னும் நூல் ஒரு ஞானியின் சிந்தனைகளைக் கொண்டது. எபிரேய மூல மொழியில் இந்நூல் קֹהֶלֶת‎ = Kohelet (அல்லது Qoheleth, Koheles, Koheleth, Coheleth) என்னும் பெயரால் அறியப்படுகிறது. இதன் பொருள் மக்களைக் குழுவாக ஒன்றுசேர்ப்பவர் என்பதாகும். இந்நூலின் பழைய தமிழ்ப் பெயர் சங்கத் திருவுரை ஆகமம் (பிரசங்கி ஆகமம்) என்றிருந்தது. ஆங்கிலத்தில் Ecclesiastes என்று அழைக்கப்படும் இந்நூலின் பெயர் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து தோன்றுவதாகும். Ἐκκλησιαστής (Ecclesiastes) என்னும் கிரேக்கச் சொல் குழு (சபை, அவை) தலைவர் என்னும் பொருள்தரும்.

நூல் எழுதப்பட்ட காலம்

[தொகு]

சபை உரையாளர் என்னும் இச்சிறுநூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. கிரேக்க தத்துவமும் சிந்தனையும் இந்நூலில் ஓரளவு இடம்பெறுகிறது.

நூலின் கருப்பொருள்

[தொகு]

இந்நூல் ஞான இலக்கியம் என்னும் வகை சார்ந்தது. இந்நூலை உருவாக்கிய ஞானி மானிட வாழ்வு எவ்வளவு குறுகியது, முரண்பாடானது எனக் கண்டுணர்கிறார். மனித வாழ்க்கையில் காணப்படும் அநீதிகளும் அவநம்பிக்கைகளும் அவருக்குப் பெரும் புதிர்களாகத் தோன்றுகின்றன. எனவே, வாழ்க்கையே வீண் என்ற முடிவுக்கு வருகிறார். மனித வாழ்வின் போக்கை ஆண்டு நடத்தும் இறைவனின் வழிகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் மக்கள் கடுமையாக உழைத்து இறைவன் அருளும் கொடைகளை வேண்டுமளவு துய்த்து மகிழுமாறு அறிவுரை கூறுகிறார்.

இந்நூலில் மனித வாழ்க்கையின் நிலையாமை, இயலாமை முதலியன விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் இந்நூல் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளமை மனிதர் தோல்வி மனப்பான்மையையும் மனத்தளர்வையும் இறைவனின் துணையால் வெல்லலாம் என்பதையே காட்டுகின்றது.

இந்நூல் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பலர் கருதலாம். ஆயினும், இக்கருத்துக்களை எதிரொலிக்கும் இதே விவிலியம், கடவுள்மீது வைக்கும் நம்பிக்கைதான் மானிட வாழ்வுக்கு நிறைபொருளை அளிக்கும் என்று வற்புறுத்திக் கூறுவதையும் அவர்கள் உணர வேண்டும்.

வாழ்க்கைக்கு இலக்கு இல்லையா?

[தொகு]

இந்நூலின் ஆசிரியர் வாழ்க்கைக்கு இலக்கு இல்லை என்னும் கருத்துடையவராய்த் தோற்றமளிக்கிறார். கதிரவன் காலையில் உதிக்கிறான், மாலையில் மறைகிறான், அடுத்த நாளும் உதிக்கிறான். காற்று வீசுகிறது, திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறது. ஆறுகள் எல்லாம் கடலில் போய் சேர்கின்றன, ஆனால் கடல் நிறைவதில்லை. மக்கள் வாழ்வும் ஓயாத உழைப்பாக இருக்கிறது. எதற்காக இந்த ஓயா உழைப்பு? ஆகவே, "வீண், முற்றிலும் வீண்; எல்லாமே வீண்" என்கிறார் சபை உரையாளர் (1:2).

அவர் செல்வத்தைப் பெருக்கினார், பல கட்டடங்களைக் கட்டினார், மந்தை மந்தையாக ஆடுமாடுகளை வாங்கினார், அடிமைகளை வேலைக்கு அமர்த்தினார், ஆனால் அவரது உள்ளம் நிறைவுகாணவில்லை. அறிவைத் தேடினார், ஆனால் அறிவு பெருகப் பெருகத் துன்பமும் மிகுந்ததே ஒழிய நிறைவு கிட்டவில்லை. ஆகவே செல்வமும் அறிவைத் தேடும் முயற்சியும்கூட வீணே என எண்ணினார்.

வாழ்க்கை நிலையற்றது. எல்லாரும் இறுதியில் சாவைச் சந்திக்கிறார்கள். அறிவிலி இறப்பதுபோல ஞானியும் ஒருநாள் இறந்து மறைகின்றான் (2:15-17). இவ்வாறு எல்லாமே வீண் எனும் முடிவுக்கு வந்தார் ஆசிரியர்.

வாழ்க்கையின் முரண்பாடுகள்

[தொகு]

சபை உரையாளர் மனித உழைப்பு பயனற்றது என்றோ, செல்வம் தேட வேண்டாம் என்றோ கூறவில்லை. அவற்றால் வாழ்க்கையில் பயனுண்டு என அவர் உணர்ந்தார். "என் முயற்சி அனைத்தும் எனக்கு மகிழ்ச்சியூட்டியது" என்று அவர் கூறுகிறார் (2:10). ஆயினும் உழைப்பும் உழைப்பினால் தேடப்படும் செல்வமும் எப்போதும் பலனளிப்பதில்லை. சேர்த்த செல்வத்தை யார்தான் தம்மோடு கொண்டுசெல்ல முடியும்? ஈட்டிய பொருளைத் தன் மக்களுக்கோ பிறருக்கோ விட்டுச் செல்வதுதான் மனித நிலை. சேர்த்த செல்வத்தை அனுபவிக்க முடியாத நிலையும் எழுகிறது.

நீதிநேர்மையைக் கடைப்பிடித்து வாழ்வோர் மேலோங்குகிறார்களா என்றால் அதுவுமில்லை. நீதி இவ்வுலகில் எப்போதும் வெற்றி அடைவதில்லை. உலகம் நீதியின்படி ஆளப்படுவதாகத் தெரியவில்லை.

இறுதியிலோ எல்லாருக்கும் நிகழ்வது சாவுதான். அது நல்லார்க்கும் பொல்லார்க்கும் பொதுவாயுள்ளது. "விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலிசெலுத்துகிறவர்களுக்கும் பலிசெலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்" (9:2).

ஆக, இம்மண்ணக வாழ்வுக்குப் பின் விண்ணக வாழ்வு உண்டா என்பது குறித்து இந்நூல் ஐயமே தெரிவிக்கிறது எனலாம். "மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர்மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?" என்று கேள்வி எழுப்புகிறார் நூலாசிரியர் (3:21).

கடவுள் தரும் கொடைகளை அனுபவிக்க வேண்டும்

[தொகு]

வாழ்க்கை பொருளற்றதுபோலத் தோன்றினாலும், இவ்வுலகில் கடவுள் நமக்கு அளிக்கும் கொடைகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறுகின்றார். "உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பு கடவுள் தந்ததே எனக் கண்டேன்" (2:24).

"ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு...எப்போதும் நல்லாடை உடுத்து...இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் மனைவியோடு இன்புற்றிரு...நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்" (9:7-10).

வாழ்க்கையை அனுபவிக்கும்போது அறநெறியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சபை உரையாளர் கூறுகின்றார்: "இளையோரே, இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்" (11:9-10).

எதைச் செய்வதிலும் மிகைப்போக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஆசிரியர்: "நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறிகொண்டவராய் இராதீர்...ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர்" (7:16-18).

சபை உரையாளர் நூலும் திருக்குறளும்: ஓர் ஒப்பீடு

[தொகு]

வள்ளுவர் வகுத்த உலக நெறியாம் திருக்குறளில் வரும் கருத்துக்கள் பல சபை உரையாளர் நூலிலும் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழ்வரும் அடைவில் காணலாம்.

கருத்து விவிலியம்: சபை உரையாளர் நூல் பாடம் இணையான திருக்குறள் எடுத்துக்காட்டு
இன்பம்-துன்பம் தொடர்கதை "வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ளவேண்டியது:

'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்" (7:17)

ஊழில் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும் (380)

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவ(து) என்?(379)

தீயதை விலக்கல் "உள்ளத்தில் வன்மத்திற்கு இடங்கொடாதே;

மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்" (7:9)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்(202)

செல்வம் நிலையாது "உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம்

அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலுல் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை" (5:13-14)

கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று(332)

வேறுபாடுகள்

[தொகு]

குறளுக்கும் சபை உரையாளர் நூலுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன என்றாலும் சில முக்கிய வேற்றுமைகள் உள்ளதையும் சுட்ட வேண்டும்.

"வாழ்க்கை பொருளற்றது; அனைத்தும் வீணே" என்று சபை உரையாளர் கூறுகிறார். ஆனால் வள்ளுவர் மறுமையில் திட்டமான நம்பிக்கையுடையவர். மக்கள் இம்மையில் செய்த நல்வினை தீவினைகளின் பயனை மறுமையில் அடைதல் கூடும் என அவர் நம்பினார். மேலும், இம்மையில் கற்ற கல்வி, பயின்ற புலனடக்கம், நிறுவிய நட்பு ஆகியவை தொடர்ந்து மறுமையிலும் பயனளிக்கும் என்பது குறள் கருத்து (காண்க: குறள்கள் 398; 126; 107; 62).

"அறிவினால் விளையும் பயன் யாது?" என்று வினவினார் சபை உரையாளர் (2:15). ஆனால் வள்ளுவரோ,
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து" (398)
என்றார்.

அறிவையும் கல்வியையும் ஓரளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதல்ல வள்ளுவர் கருத்து.
"தொட்டனைத்(து) ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்(து) ஊறும் அறிவு"(396)
என அவர் வலியுறுத்துவார்.

சபை உரையாளர் நூலும் விவிலியச் செய்தியும்

[தொகு]

சபை உரையாளர் நூலில் அடங்கியுள்ள செய்தி மனித வாழ்க்கை பொருளற்றது என்று கூறுவதுபோல் தோற்றமளித்தாலும், விவிலியம் முழுவதும் தரும் செய்தி மனிதருக்கு நம்பிக்கை அளிப்பதாகும். கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழும் மனிதர் இவ்வுலக முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்துவிட மாட்டார்கள். மாறாக, தீமைக்கு ஒரு நாள் முடிவு வரும், நன்மை இறுதியில் வெற்றிகொள்ளும் என்னும் பிடிப்பு அவர்கள் உள்ளத்தில் இருக்கும். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதே விவிலியத்தின் மையச் செய்தி.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bible Gateway passage: Ecclesiastes 1 - New International Version". Bible Gateway (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  2. "Greek Word Study Tool". www.perseus.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
  3. "Strong's Hebrew: 6951. קָהָל (qahal) – assembly, convocation, congregation". biblehub.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.

சபை உரையாளர் நூலின் உட்பிரிவுகள்

[தொகு]
பொருளடக்கம் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1) வாழ்க்கை பயனற்றது 1:1-11 979
2) சபை உரையாளரின் அனுபவம் 1:12 - 2:26 979 - 981
3) ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு 3:1-15 981 - 982
4) உலகில் காணப்படும் அநீதி 3:16 - 4:16 982 - 983
5) கடவுளுக்குக் கொடுக்கும் வாக்கைப் பற்றிய எச்சரிக்கை 5:1-7 983
6) உலக வாழ்க்கை பயனற்றது 5:8 - 6:12 983 - 985
7) வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் 7:1 - 8:1 985 - 986
8) அரசனுக்கு அடங்கி நட 8:2-8 986 - 987
9) நல்லாரும் பொல்லாரும் 8:9 - 9:12 987 - 988
10) ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள் 9:13-18 988
11) மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள் 10:1-20 988 - 989
12) ஞானமுள்ளவரின் செயல்கள் 11:1-7 989 - 990
13) இளையோருக்கு அறிவுரை 11:9 - 12:1-8 990 - 991
14) தொகுப்புரை 12:9-13 991

மேலும் காண்க

[தொகு]

விக்கிமூலத்தில் சபை உரையாளர் நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபை_உரையாளர்_(நூல்)&oldid=4098700" இலிருந்து மீள்விக்கப்பட்டது