(Translated by https://www.hiragana.jp/)
நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல்

நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்

நூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும்.மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.[1][2][3]

நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.

நூலக வரலாறு

[தொகு]

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கள் களி மண் தகடுகளில் எழுதினர். அதனை சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும்.

எகிப்தியர்கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில் ஏழு இலட்சம் பாப்பிரசு உருளைகளைக் கொண்ட கருகூலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது இன்றைய நவீன நூலகங்களின் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கது. உருமானியர்களின் காலத்தில் யூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நிறுவிய போட்லியின் எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.

பொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் 1850 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pfeifer, Wolfgang (1989). Etymologisches Wörterbuch des Deutschen. A-G. Berlin: Akademie-Verlag. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-05-000641-2.
  2. Virani, Shafique N. (2007-04-01). The Ismailis in the Middle Ages. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780195311730.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-531173-0. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
  3. Singleton, Brent D. (2004). "African Bibliophiles: Books and Libraries in Medieval Timbuktu". Libraries & Culture 39 (1): 1–12. doi:10.1353/lac.2004.0019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-4855. https://www.jstor.org/stable/25549150. பார்த்த நாள்: 2022-01-19. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலகம்&oldid=4124577" இலிருந்து மீள்விக்கப்பட்டது